top of page

பணத்தின் பயணம் Panathin Payanam

Purple Book House UK

உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும். உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது. கற்காலம் தொடங்கி இன்றைய கலர்ஃபுல் காலம் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சியை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அறிந்துகொள்ளலாம்.

 

பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறையில் தொடங்கி, தங்கம் போன்ற விலை உயர்ந்த நகைகளைப் பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தி, கால ஓட்டத்தில் கரன்சிகளாக உருவெடுத்தது வரையிலும், பல்லவர் கால வரலாற்றில் பணம் தொடர்பாகப் பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய ஒவ்வொரு நிகழ்வையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். இந்தியாவின் பண்டைய நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் கால நாணயங்கள், தமிழக நாணயங்கள், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் கால பண மதிப்பிலான வணிகத் தொடர்புகள் என வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பணத்தின் சுவாரஸ்யப் பயணத்தை எளிய வார்த்தைகளால் விளக்கியிருப்பதோடு, சமீபத்திய உதாரணங்களுடன் தொகுத்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு.

 

சவால்கள் நிறைந்த இன்றைய உலக வாழ்க்கையில் நாம் திரட்டும் பொக்கிஷத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முறை, நாணவியல் கூறுகளின் அடிப்படையில் இன்றைய பணத்தின் மதிப்பு என்ன, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, உலக வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் முதல் மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் வரையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, நமக்கு எளிதில் பிடிபடாத பற்பல வரலாற்று விழுமியங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. ஓய்வை மறந்து, உணவைத் துறந்து, உறக்கத்தைப் பிரிந்து ஓடி ஓடி சேர்க்கும் பணம், இந்த நூலின் வழியே தன் வரலாறைக் கூறவந்துள்ளது... இனி, பணம் பேசும்!

 

பண்டமாற்றில் தொடங்கி பிட்காயின் வரை பணத்தின் வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல். சரக்குப் பணம், வங்கிகள், பங்குச் சந்தைகள், பொருளாதார மோசடிகள் - இவற்றின் வரலாறும் உள்ளே அத்தியாயங்களாக...

 

மொத்தம் 60 அத்தியாயங்கள், 488 பக்கங்கள். விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு.




Comments


bottom of page